விடை அறியா வாழ்க்கை கேள்விகள் குறித்த நான்கு பரிமாணங்களைக் கடந்த பதிவில் நாம் பார்த்தோம். இப்பரிமாணங்களில் தோற்றத்தைக் குறித்த விடைகளை யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது

யோவான் 1:1

ஆதியிலே வார்த்தை இருந்தது” என்பதன் மூலம் வார்த்தை உண்டாக்கவில்லை மாறாக அது நித்தியமாக இருந்தது என்பது தெளிவு. ”அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது” என்பதிலிருந்து கடவுளோடு வார்த்தை இருந்தது, நமக்கு தெளிவாகிறது. 14-ஆம் வசனத்தில் இந்த ”வார்த்தை மாமிசமாகி நம்முள்ளே வாசம் பண்ணினார்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார். இதில் நமக்குத் தெளிவாகிறது என்னவென்றால் கடவுளோடு இருந்த இந்த வார்த்தையே இயேசு கிறிஸ்துவாக நம்மோடு உலக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்தார் என்பதாகும். “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்பதன் மூலம் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து கடவுளுடைய எல்லாத் தன்மைகளையும் முழுமையாக பெற்றவராக கடவுளைப் போலவே இருந்தார் என்பதும் தெள்ளத்தெளிவாக நமக்கு இந்த வசனத்தின் மூலம் தெரிகிறது. கடவுளை ஒத்த சாரமும் தரமும் தன்மையும் பெற்றவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார். கடவுளின் அன்பான இதயத்தையும், உணர்வான உள்ளத்தையும், செறிவான சிந்தனையையும் முழுமையாக ஒருசேர பெற்றவரே நம் நாதர் இயேசு கிறிஸ்து. அவரை அன்றி வேறொருவரும் கடவுளை நமக்கு வெளிப்படுத்த முடியாது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

யோவான் 1:2,3

அனைத்தும் உண்டாக காரணணராய் இருந்தவர் கிறிஸ்து என்பது இவ்விரு வசனங்களின் மூலம் தெளிவாகிறது. வெறுமையில் இருந்து உலகம் உருவாக்கப்பட்டது என்பதே கிறிஸ்தவ விசுவாசம். வேதாகமத்தின் முதல் இரு வசனங்கள் –

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது

ஆதியாகமம் 1:1,2

என்று கூறுகிறது. வெறுமையாய் இருந்த உலகை உயிரினங்கள் நிறைந்த, அழகான இயற்கை சூழல் நிரம்ப உண்டாக்கியவர் கடவுள் என்பதையும் குறிப்பாக கடவுளிடம் இருந்த வார்த்தை என்பதையும் அப்போஸ்தலனாகிய யோவான் குறிப்பிட்டுக் கூறுகிறார். இவ்வார்த்தை இல்லாமல் எதுவுமே உண்டாக்க படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். கடவுளின் படைப்பு ஓர் தொடர்பம் (continuum) என்றே குறிப்பிட வேண்டும். வானியற்பியல் (astrophysics) ஆய்வுகள் இன்று, அகிலங்கள் (universes) வெறுமையாய் இருப்பதாகவும் வெறுமையிலிருந்து ஆற்றல் உருவாகி பருப்பொருள்கள் (matter) உருவாகுகின்றன என்பதை நிறுவியுள்ளது. அறிவியலையும் கடவுள் குறித்த அறிவையும் ஒப்பிடுவது அல்ல என் நோக்கம். அவ்வாறான ஒப்பீடே தவறு என்பதே என் என் நிலைப்பாடு. அறிவியல்பூர்வமான வெறுமையை தாண்டி ஒன்றும் இல்லாத மனிதர்களை உருவாக்கி அவர்களை உலகில் அமர்த்தி உலகை வாழ்வதற்கான ஆற்றலை வழங்கி மனித உயிர்களை தன்னுடைய சாயலாக கடவுள் உருவாக்கியுள்ளார்.

அகிலத்தின் (universe) வெறுமையில் இருந்து இருண்ட ஆற்றல் (Dark Energy) உருவாகி பருப்பொருட்களை உருவாக்கி அதன்பின் படிப்படியாக உயிரற்ற பருப்பொருட்களும் (Inorganic Matter) உயிருள்ள பருப்பொருள்களும் (Organic Matter) உருவாகின என்று இன்றைய அறிவியல் நமக்கு தெளிவு படுத்தலாம். எனினும், உருவாக்கப்படாமல் என்றென்றும் நித்தியமாக இருக்கின்ற கடவுளும் அவருடன் இருக்கின்ற வார்த்தையும் அகிலங்களின் வெறுமைக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவர்களாக (transcends) இருக்கின்றனர். ”வார்த்தை மாமிசமாகி நம்முள்ளே வாசம் பண்ணின” இயேசு கிறிஸ்துவாகவும், இன்றும் நம்முள்ளே வாசபண்ணும் (Immanence) பரிசுத்த ஆவியான தேற்றரவாளராகவே கடவுள் இருக்கின்றார். கடவுள், அனைத்தையும் கடந்த வராகவும் (transcendent), அனைவருக்குள் (Immanent) இருப்பவராகவும் இருக்கிறார் என்பதை நாம் புரிந்துக்கொண்டு விசுவாசிக்க வேண்டும்.

தமிழாய்ந்த வள்ளுவப் பெருந்தகையும் தனது முதல் திருக்குறளில் இச்செய்தியை தான் சொல்லுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

திருக்குறள், கடவுள் வாழ்த்து, 1

இக்குறளுக்கு கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

இதை இன்னும் ஆழமாய் நோக்கினால், எழுத்துக்களை வார்த்தைக்கு ஒப்பிட்டும் பார்க்கலாம். கிரேக்கர்களின் தத்துவத்திலும் வார்த்தை (Logos) பரம்பொருளை குறித்தாகவே பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அறிவியலும் திருக்குறளும் கிரேக்க தத்துவங்களும் கூறும் தகவல்கள் கடவுளின் வேதாகமத்தில் இருப்பதைக் குறித்தோ இல்லாமல் இருப்பதைக் குறித்தோ எந்த கவலையும் இருக்கப் போவதில்லை. அவற்றை இப்பதிவில் குறிப்பதற்கான நோக்கம் ஒத்த கருத்தாடல்கள் இருக்கின்றன என்பதை குறிப்பிடவே.

அகிலங்களின் (Universes) தோற்றமும் உலகத்தின் (Earth) தோற்றமும் அனைத்து பருப்பொருட்டகளின் (Matter) தோற்றமும் உயிரற்ற (Inorganic) பருப்பொருட்டகளின் தோற்றமும் உயிருள்ள (Organic) பருப்பொருட்டகளின் தோற்றமும் ஆதிமுதலாய் நித்தியமாக இருக்கின்ற கடவுளை முதற்றாய் உண்டானவைகளே என்பதே யோவான் நற்செய்தியின் முதல் மூன்று வசனங்கள் தெளிவுப்படுத்தும் செய்தி.

யோவான் நற்செய்தி குறித்த என் வலைப்பதிவு தொடரில் என்னோடு இணைந்திருங்கள். அப்போஸ்தலனாகிய யோவானோடு சேர்ந்து பயணிப்போம் !!

முதல் பதிவு: https://theaarons.in/2020/11/29/gofjohn-1/

Few additional Readings

Dark Energy:

https://www.nationalgeographic.com/science/space/dark-matter/

https://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy#:~:text=Universe%20Dark%20Energy%2D1%20Expanding%20Universe&text=Astronomers%20theorize%20that%20the%20faster,that%20is%20pulling%20galaxies%20apart.&text=One%20explanation%20for%20dark%20energy,empty%20space%20is%20not%20nothing.

William Barclay Commentary: https://www.studylight.org/commentaries/dsb/john.html