கடவுள் யார் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழும் ஒரு கேள்வி. கடவுள் மறுப்பாளர்களும் இந்த கேள்வியை சிந்தித்திருபார்கள். திருமறை கடவுளை குறித்து நமக்கு என்ன கற்றுத்தருகிறது. கடவுளை நாம் எப்படி புரிந்துக்கொள்ள முடியும்

கடவுள் சிருஷ்டிகர், அவர் எல்லாரையும் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்கிறார். அவர் பரிசுத்தரும் மாறாதவருமாய் இருக்கிறார். அவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அவர் அன்பு, நன்மை, ஞானம், நீதி மற்றும் சத்தியத்தில் நிறைவானவர். தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் மூலமாகவும் அவருடைய சித்தத்தின்படியும் அன்றி எதுவும் நடப்பதில்லை.

கடவுளை குறித்த மேலே குறிபிடப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தமுடையவை. திருமறை பகுதிகளை கொண்டே அவற்றை புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.

ஆதியாகம் 1:1-2 வசனங்களும் யோவான் 1:1-3 வசனங்களும் தேவன் சிருஷ்டிகர் என்ற உண்மையை தெளிவாக விளக்குகிறது. படைக்கப்பட்ட அனைத்தும் தேவனிடத்தில் இருந்த வார்த்தையாலே, தேவனாய் இருந்த வார்த்தையாலே உண்டாய்யிற்று.

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை – யோவான் 1:1-3

நமது கண்களால் காணும் காட்சிகளாலும், மனதில் எழும் எண்ணங்களினாலும் இருதயத்து உணர்வின்னாலும் தேவன் உண்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். தேவன் உலகத்தை உண்டாக்கினார், ஆகவே, நம்மைச் சுற்றிலும், ஏன் நம்முடைய சொந்த சரீரத்தைப் பார்க்கும்போதுகூட, மலைகள், பெருங்கடல்கள் மற்றும் நம் சரீரங்கள் அனைத்தும் ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதற்குச் சாட்சி பகர்வதைக் காணலாம்.

தேவாதி தேவன் பரிசுத்தராக இருக்கிறார். அவர் பரிசுத்தத்திற்கு நிகர் எதுவும் இல்லை.

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். -ஏசாயா 6:3

கர்த்தாதி கர்த்தர் மாறாதவராக இருக்கிறார். He is an Unchanging God. அதனால் தான் அவரது பண்புகள் மாறுவதில்லை. அன்பும், கிருபையும் நிறைந்தவர். அவர் நீதியாய் நியாயம் தீர்ப்பவர். ஞானத்தின் ஊற்றாக இருப்பவர். சகல வல்லவராக, சகலும் அறிந்தவராக வீற்றிருப்பவர்.

நான் கர்த்தர் நான் மாறாதவர்; – மல்கியா 3:6

கடவுள் அனைத்தையும் கடந்தும் நிற்கிறார், அதே வேளையில் நம்முள்ளும் நிலைத்து இருக்கிறார். He transcends everything, yet HE is Immanent in us. காலங்களைக் கடந்தவர், பருப்பொருள்களைக் (Matter) கடந்தவர். உருவாக்கப்படாமல் என்றென்றும் நித்தியமாக இருக்கின்ற கடவுளும் அவருடன் இருக்கின்ற வார்த்தையும் அகிலங்களின் வெறுமைக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவர்களாக (transcends) இருக்கின்றனர்.  எனினும் நம்முள் வாழ்கின்ற கடவுளாகவும் இருக்கிறார்.

இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் – வெளிப்படுத்தல் 1:8

தேவனின் மூலமாகவும் அவருடைய சித்தத்தின்படியுமே அனைத்தும் நடந்தது, நடக்கிறது, நடந்தேறும். கர்த்தத்துவம் (Sovereignty) அவருடையது.

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். – தானியேல் 4:35

தேவன் சிருஷ்டிகர், பரிசுத்தர், மாறாதவர், தொடக்கமும் முடிவும் இல்லாதவர், அன்பானவர், ஆவியானவர், அவர் சித்த படியே எல்லாம் நடைபெறும்.

கிறிஸ்தவர்களின் விசுவாசத்திற்கு அடிப்படையான சத்தியம் இது. ஒரே சர்வ வல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பது. “வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்” என்று தானே நமது விசுவாசத்தை அறிக்கை செய்ய ஆரம்பிக்கிறோம். அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கைகளில் நிலைப்பெறுவோம்.

பின்குறிப்பு: அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கைகளை குறித்து 40 பதிவுகள் இட வாஞ்சிக்கிறேன். இது முதல் படி..என்னுடன் 39 படிகள் ஏற உடன் பயணிக்க அன்புடன் அழைக்கிறேன்.

தொடர்புடைய மற்றொரு பதிவு: https://theaarons.in/2020/12/13/gofjohn-2/