தேவன் தனது படைப்புகள் அனைத்தையும் கடந்து நிற்கும் (transcendent) ‘இறுதியான யதார்த்த உண்மை‘ (Ultimate Reality) ஆக இருக்கிறார், அதே நேரத்தில் அவர் நம்முள்ளும் (Immanent) ‘இம்மானுவேலாக‘ ஆகவும் இருக்கிறார். கடவுள் என்ற தமிழ் வார்த்தை கடவுளின் இந்த தன்மையை அழகாக விளக்குகிறது. கட – கடந்த நிலை (Transcendent) மற்றும் உள் – உடனிருக்கின்ற (Immanent).

கடவுளை அவருடைய சுய வெளிப்பாட்டின் மூலமாக மட்டுமே நாம் அறிய முடியும். கடவுளைப் பற்றிய விவிலிய வெளிப்பாடு படிப்படியானது (progressive), அது இயேசு கிறிஸ்துவில் அதன் முழுமையை அடைகிறது. வெளிப்பாடு (Revelation), அனுபவம் (experience), வேதாகமம் (scripture), விசுவாசிகளின் சமூகம் (community of believers), நமது மரபுகள் (traditions) மற்றும் பகுத்தறிவு (reason) ஆகியவை கடவுளைப் புரிந்துகொள்வதற்கான நெறிமுறை காரணிகளாக (normative factors) பங்களிக்கின்றன. கடவுளைப் பற்றி மேலும் ஆழமாகப் பார்ப்போம். “எல்லார்மேலும்,” “எல்லாரோடும்,” மற்றும் “எல்லாருக்குள்ளும்” இருக்கும் அவருடைய திரித்துவ சுபாவத்தை நாம் புரிந்து கொள்வோம்.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஒரே தேவன் (மத்தேயு 28:19-20) என்ற உண்மையை திரித்துவம் விவரிக்கிறது. அவர்கள் எப்போதும் அன்பான உறவில் ஒன்றாக இருக்கிறார்கள்(யோவான் 14:16-17). ஒவ்வொருவரும் ஒரே பண்புகளுடன் முழுமையாக தேவனாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரே மனதுடன் ஒரே சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் மற்றும் வழிபாட்டிற்கு சமமாக தகுதியானவர்கள் (2 கொரிந்தியர் 13:14).

இந்த திரித்துவ உண்மையை புரிந்துக்கொள்ளும் போது, பல கேள்விகள் நம்மில் எழும். அவற்றில் சில முக்கியமானவைகளை கீழே விவாதிப்போம்.

பிதா, குமாரன் மற்றும் ஆவியானவர் சமமாக நித்தியமானவர்கள் மற்றும் மகிமையானவர்கள். திரித்துவத்தின் எந்த ஒரு நபருக்கும் மற்றவர்களை விட அதிகமான பண்புகள் இல்லை. பிதா குமாரனுக்கு முன் இருக்கவில்லை. பிதா அவரை ஒரு மனித குழந்தையாகப் பிறக்க அனுப்புவதற்கு முன்பே குமாரன் எப்போதும் குமாரனாகவே இருந்தார். மேலும் பிதாவும் குமாரனும் ஆவிக்கு முன்பாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் சமமாகவும் எப்பொழுதும் தேவனாக இருக்கிறார்கள், ஆனால் திரித்துவத்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறது.

  • பிதா தம்முடைய சித்தத்தைச் செய்ய குமாரனை அனுப்புகிறார்,
  • பிதாவும் குமாரனும் ஆவியை அனுப்புகிறார்கள்.
  • குமாரன் பிதாவின் அதிகாரத்திற்கு மகிழ்ச்சியுடன் அடிபணிகிறார் (யோவான் 3:17; 4:34; 8:28-29).
  • ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் அடிபணிவதில் அதே மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறார் (யோவான் 16:12-14).
  • திரித்துவத்தின் மூன்று நபர்களுக்கும் ஒரே சித்தம் உண்டு, எப்போதும் சரியான இணக்கத்துடன் ஒன்றாக வேலை செய்கிறார்கள்

திரித்துவம் நம்மை தேவனைப் பற்றிய ஆச்சரியத்தாலும் பிரமிப்பாலும் நிரப்புகிறது. எந்த மனித மனமும் இவ்வளவு சிக்கலான மற்றும் உண்மையான ஒன்றை கற்பனை செய்திருக்க முடியாது. இயேசு முழுமையாக தேவன் மற்றும் தேவனிடமிருந்து ஒரு தனி நபர். தேவனாக இருப்பவராகவும், தேவனிடமிருந்து பிரிந்த ஒருவராலும் மட்டுமே, நம்முடைய பாவத்திற்காக தேவனுடைய முழு கோபத்தையும் தாங்க முடியும். குமரானாகிய இயேசு கிறிஸ்துவே அதை செய்து முடித்தார். நம்முடைய மீட்பிற்கு பின், விசுவாச வாழ்வில் பாவம் தவிர்த்து வாழ நம்முள் வாழும் தேற்றிரவாளனே, பரிசுத்த ஆவி. பிதாவும் குமாரனும் மீட்பு மற்றும் பரிசுத்தமாக்குதல் வேலையைத் தொடர பரிசுத்த ஆவியை அனுப்பினார்கள் (யோவான் 14:16; 16:17). படைப்பைப் போலவே, மீட்பிலும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்கு வெவ்வேறு பங்குகள் உள்ளன (ஆதியாகமம் 1:2, 9-10; யோவான் 1:3). தேவன் திரித்துவ தேவன் என்பதைப் புறக்கணிப்பது அவரைப் பற்றிய உண்மையை குறைவாகவும் தவறாகவும் நம்புவதாகும். நாம் தேவனைப் பற்றி தவறான சித்திரத்தைக் கொண்டிருக்கும்போது, நம்முடைய வழிபாடு உண்மையாக இருக்காது, நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு தகுதியானபடி அவரை மகிமைப்படுத்தாது

நம்முடைய வரையறுக்கப்பட்ட மனித மனங்களால் தேவனைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதது அதிகம் இருந்தாலும், தேவன் மூன்று நபராகவும் ஒரே தேவனாகவும் இருக்கிறார் என்று வேதம் மிகத் தெளிவாகக் கூறுகிறது (மத்தேயு 28:19; 20 கொரிந்தியர் 13:14). தேவன் எல்லையற்றவர் (infinite). அவர் மட்டுமே ஒரே ஜீவனில் மூன்று நபர்களாக இருக்க முடியும். (He alone can be three persons in one Being) அவர் பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. உபாகமம் 6:4 ன் படி கடவுள் ஒருவரே. திரித்துவத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் இணைந்தே தேவனுடைய முழு தன்மையை பெற்றிருக்கின்றனர் (Each person within the Trinity is all that God is). திரித்துவத்தின் ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஒவ்வொரு வேலையிலும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, பிதா குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16-17); இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார் (யோவான் 6:38); மற்றும் பிதாவும் குமாரனும் தாங்கள் ஆரம்பித்த வேலையை முடிக்க பரிசுத்த ஆவியை அனுப்பினார்கள் (யோவான் 14:16; 16:7). நம் தேவனைப் போல் யாரும் இல்லை; நம்முடைய கர்த்தர் எவ்வளவு பெரியவர்! மகத்துவமானவர்

ஆம், ”கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (சங்கீதம் 34:8a). திரித்துவ தேவனை இயல்பை அனுபவிப்பது முக்கியம், அதைச் செய்யாவிட்டால், வேதத்தில் பேசப்படும் தேவனைப் பற்றிய இந்த அடிப்படை உண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் 4:6-ல் எழுதுகிறார், “எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்”.

எல்லாவற்றிற்கும் மேலானவர்” – முழு பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்தும் எல்லாவற்றிற்கும் மேலானவர் (பிதாவாகிய தேவன்),

எல்லாரோடும்” இருப்பவர் – இம்மானுவேலாக கர்த்தராகிய இயேசுவாக நம்முடன் இருப்பவர் (குமாரனாகிய தேவன்) மற்றும்

எல்லாருக்குள்ளும்” இருப்பவர் – பரிசுத்த ஆவியாக நம்மில் வாசம்பண்ணுகிறவர் (பரிசுத்த ஆவியானவராகிய தேவன்)

முடிவாக நாம் நன்கு அறிந்த இந்த கீர்த்தனைப்பாடல் திரித்துவ தேவனை எத்தனை அழகாக சித்தரித்திருக்கிறது என்று பாருங்கள். நித்ய திரியேகரின் புகழ் பாடுவோம். சருவ லோக அதிபதியாம் நம் தேவனுக்கே மாட்சி உண்டாவதாக !!

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.

திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.

பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.

முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்.

பின்குறிப்பு: அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கைகளை குறித்து 40 பதிவுகள் இட வாஞ்சிக்கிறேன். இது இரண்டாம படி..என்னுடன் இன்னும் 38 படிகள் ஏற உடன் பயணிக்க அன்புடன் அழைக்கிறேன்.

முதல் படி: https://theaarons.in/2025/08/30/who-is-god-2/