வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல ஆழமான கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளுவது  உண்டு. பெரும்பாலும் இக்கேள்விகள் நாம் தனிமையில் இருக்கும் போதோ, அல்லது வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் போதோ ஏழும். அவ்வாறு நம்முள் ஏழும் ஆழமான சில கேள்விகள்

  • நான் ஏன் இவ்வுலகில், இந்த குடும்பத்தில் இந்த இடத்தில் பிறந்தேன்?
  • எனக்கு ஏன் கஷ்டங்கள்? இந்த பாடுகளை நான் ஏன் எதிர்கொள்ள வேண்டும்?
  • நான் ஏன் இவ்வாறு பயணித்து கொண்டிருக்கிறேன்?
  • உலகம் என்று ஒன்று ஏன் உள்ளது? அதில் நான் ஏன் இருக்கிறேன்?
  • நான் ஏன் இன்று இந்த நபரைச் சந்தித்தேன்?
  • ஏன் இந்த கோரமான நிகழ்வை நான் வாழ்க்கையில் சந்தித்தேன்?
  • ஏன் இந்த நபர் என் வாழ்கை துணையாக வந்தார்?
  • மற்றவர்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள்?
  • மற்றவர்களுக்கு என்னால் என்ன பயன்?
  • நான் என்  வேலை செய்யும்/படிக்கும்  இடத்தில்  சரியான முறையில் பயணிக்கிறேனா?
  • நான் ஒரு நல்ல கணவன்/மனைவி, சகோதரன்/சகோதிரி, மகன்/மகள்,  நண்பனாக, பணியாளாக இருக்கிறேனா?
  • ஏன் இந்த வாழ்க்கை?
  • மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா?

நாம் இக்கேள்விகளை சற்றே ஆராய்ந்தால், இந்த கேள்விகள் அனைத்தும் 4 பரிமாணங்களை உள்ளடக்கியவைகளாக தான் இருக்கும்

  1. தோற்றம் / தொடக்கம் ( Origin)
  2. நோக்கம் / காரணம் (Purpose)
  3. அறநெறி (Moral Value)
  4. முடிவு  (Destiny)

இவ் நான்கு பரிமாணங்களை குறித்த விடை அறியா கேள்விகளை குறித்துதான் மனிதன் தன் ஆன்மீக தேடலை தொடங்குகிறான். வாழ்கை என்னும் பயணம் பல இன்பங்களையும், துன்பங்களையும், சவால்களையும் ஒரு மனிதனக்கு தருகிறது. மனிதன் சோர்வுற்றிருக்கும் போதோ அல்லது வாழ்கை தந்த உயரத்தை புரிந்து கொள்ள முனையும் போதோ தான், மனிதனது தேடல் இந்த நான்கு பரிமாணங்களை குறித்து அமையும்.

  1. நான் யார்? (தோற்றம்) Who am I?
  2. என் வாழ்வின் காரணம் என்ன? (நோக்கம்) What is the Purpose of my life?
  3. என் வாழ்விற்கான அறநெறி என்ன? (அறநெறி) How Good Am I?
  4. என் மரணத்திற்கு பின் என்ன நிகழும்? (முடிவு) What happens to me after I die?

இந்த பரிமாணங்களை, இந்த விடை தெரியாத கேள்விகளை எல்லாம் கடந்து, யாவையும் கடந்த (ultimate) மெய்யான பொருளை (reality) குறித்த தேடல் மனிதர்களை பல திசைகளில் / கோணங்களில் எடுத்து சென்றுக்கொண்டிருக்கிறது. அனால் எல்லாவற்றையும் கடந்தவராய், எனினும் நம்மை நாடி, தேடி நம்மோடு நம்முள் இருக்கிறவராகதான் “கட|வுள்” இருக்கிறார்.

கிறிஸ்தவ வேதாகமத்தில் யோவானின் நற்செய்தி முதல் அதிகாரத்தின் கடவுள் ”வார்த்தை” ஆக  அறியப்படுகிறார்  

”வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்”

யோவான் 1:14, பரிசுத்த வேதாகமம்

கிரேக்கர்களின்  தத்துவத்தில்  வார்த்தை (Logos), அகிலம் முழுமையும் உள்ளிருப்பதாகவும் (immanent), யாவைற்றையும் கடந்ததாகவும் (transcendent) அறியப்படுகிறது.

கடவுள், அனைத்தையும் கடந்த வராகவும், அனைவருக்குள் இருப்பவராகவும் யோவான் தனது நற்செய்தி நூலில் நமக்கு கடவுளை அறிமுகப்படுத்துகிறார்.  மேலே நாம் விவாதித்த நான்கு பரிமாணங்களுக்கான விடையும் இந்த நற்செய்தி நூல் நமக்கு அளிக்கிறது.

யோவான் நற்செய்தி குறித்த என் வலைப்பதிவு தொடரில் என்னோடு இணைந்திருங்கள். அப்போஸ்தலனாகிய யோவானோடு சேர்ந்து பயணிப்போம் !!