ஆதியாகம மூதாதையரின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துக்கொள்ளும் பாடங்களை குறித்த பதிவுத்தொடரில் இன்று ஆபேலைக் குறித்து பார்ப்போம்
ஆபேலும் காயினும் கடவுளுக்குக் காணிக்கை கொண்டு வந்தனர், ஆனால் ஆபேலின் காணிக்கையை மட்டும் கர்த்தர் ஆங்கீகரித்தார். காயீனுக்கு மிகவும் எரிச்சலுண்டாகி, அவன் தன் சகோதரனாகிய காயீனைக் கொன்றான். இந்த நிகழ்வு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆதியாகமம் நான்காம் அதிகாரம் இந்த நிகழ்வை பதிவு செய்கிறது. ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரிக்க காரணம் என்ன? இதைக் குறித்து வேதத்தில் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
ஆபேலின் இருதயத்து எண்ணங்களும், அவனது பணிவும், அவன் கர்த்தருக்கு கொடுத்த இடமும் முக்கியத்துவமும் கடவுள் அவனை அங்கீரிக்க காரணமாய் இருந்திருக்கும். கடவுளுக்கு நாம் செய்யும் ஆராதனை அவருக்கு உகந்தாகவும் ஏற்புடையதாகவும் இருக்க நம் வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும்.
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
ஆதியாகமம் 4:4
இவ்வசனத்தில் இரண்டு வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகிறது – ”தலையீற்று”, ”கொழுமையானவை”. இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள முடிவது முதன்மையானவற்றை கடவுளுக்காக ஆபேல் கொடுக்கிறான், கடவுள் முதன்மையானவர் எனவே அவருக்கு முதன்மையானவற்றை சிறந்தவைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆபேலிடம் இருந்திருக்கும், அவ்வெண்ணமே, அவனது செயலாகவும் வெளியாகிற்று.
நாம் நம் முதன்மையானவற்றை, சிறந்தவைகளை கடவுளுக்கு கொடுக்கிறோமா? அப்படி செய்வதே அவருக்கு ஏற்புடைய ஆராதனையாக இருக்குமல்லவா? இந்த கேள்வியை சிந்திக்கும் போது, எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்
- முதன்மையான நேரத்தை கடவுளுக்குக் கொடுப்போம்
ஒரு நாளில் நான் மிகவும் ஆற்றலுடன் செயல்ப்படும் நேரத்தை நாம் கடவுளுக்காக கொடுக்க வேண்டும். அதிகமாக காலைப்பொழுது நம் ஆற்றலளவுகள் அதிகமாக இருக்கும். அப்பொழுதை வேதம் வாசிக்கவும், ஜெப்பிக்கவும், நமக்கு கர்த்தர் கொடுத்த தாலந்துகளைப் பயன்படுத்தவும் செய்ய வேண்டும்
2. கடவுளுக்கான பயபக்தியும் அச்சமும் (Reverential awe)
கடவுளின் மகிமையை உணர்ந்தவர்களாய், அவரின் கிருபையையும், அன்பையும், பரிசுத்தத்தையும், நீதியையும் உணர்ந்தவர்களாய் அவரை உண்மையோடும், முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும், முழு மனத்தோடும், முழு பலத்தோடும் அன்புக்கூர்ந்து தொழுதுக் கொள்ளவேண்டும்.
படைப்பின் காரணராய், சர்வ வல்லமை பொருந்திய நம் பிதாவாகிய கடவுளை பயத்துடனும் பக்தியுடனும் தொழுதுக் கொள்ளவேண்டும்.
இயேசு கிறிஸ்துவாகிய மெய்மையை (சத்தியம்) நாம் அறிந்தவர்களாய், அவர் நமக்காக சிலுவையில் ஆற்றிய தியாகத்தை புரிந்தவர்களாக ”ஆவியோடும் உண்மையோடும்” (யோவான் 4:23) தொழுதுக் கொள்ளவேண்டும்.
தேற்றரவாளானாக நம்முள்ளே வாசம் செய்யும் பரிசுத்தாவியில் நிறைந்தவர்களாக அவரின் ஆலோசனைகளை கைக்கொள்ளுபவர்களாக நன்றியோடு அவரை தொழுதுக்கொள்ளவேண்டும்
3. உண்மையான பாவறிக்கையுடன் ஆராதிக்க வேண்டும்
நம்மை முழுமையாக கடவுள் அறிந்திருக்கிறார். நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார் என்று ஏரேமியா தீர்கனுக்கு கூறிய கர்த்தர், நம்மொருவருக்கும் ஒரு நோக்கத்தை வைத்துக்கிறார். அதை அறிந்தவர்களாக, உணர்ந்தவர்களாக, நம் குறைகளை, பிழைகளை, தவறுகளை, பாவங்களை அறிக்கையிடுகிறவர்களாக நம்மை கடவுளிடம் சமர்ப்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்
4. எதிர்பார்புடன் கூடிய விசுவாசமுடையவர்களாக ஆராதிக்க வேண்டும்
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்று வேதம் எபிரெயர் 11:1 நமக்கு சொல்லுகிறது. கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்தெழுதலிலும் நம்பிக்கையுடையவர்களாக, நமது மீட்பின் உறுதியும் நமது நித்திய வாழ்வின் நிச்சயமும் உடையவர்களாக நாம் கடவுளை அணுகவேண்டும்
5. கடவுளின் அருட்பணியை செய்பவர்களாக இருக்க வேண்டும்
நமது எண்ணமும் செயலும் எப்பொழுதும் கடவுளோடு இசைந்தாக இருக்கவேண்டும். அவர் நமக்கு கொடுத்த தாலந்துகளை பயன்படுத்துக்கிறவர்களாக, கடவுளுடைய பணியை செய்ய வேண்டும்.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்
ரோமர் 12:1-2
6. போதுமான நேரத்தை கடவுளின் அருட்பணிக்காக கொடுப்போம்
நமது செல்வத்திற்கு தசமபாகம் செலுத்துவது கிறிஸ்துவத்தில் நாம் கடைப்பிடிக்கும் ஒர் முறையாக உள்ளது. கடவுள் நமக்கு இந்த பூவுலகில் தந்திருக்கும் நாட்களில் தசமபாகத்தைக் கடவுளின் அருட்பணிக்காக தருகிறோமா? ஒரு வாரத்தில் 7 நாட்கள் என்றால், 168 மணி நேரங்கள், ஒரு வாரத்தில் நாம் 16.8 மணி நேரங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2.4 மணி நேரங்கள் – 144 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் கடவுளுக்காக நாம் கொடுக்க வேண்டும். இந்த சிந்தனையை சற்றே உள்வாங்கி நம் சுய மதிப்பீடு செய்து பார்ப்போமா?
இந்த ஆறு காரியங்களுடன் நாம் கடவுளை ஆராதிக்கும் போது, அவருக்கு மிகவும் ஏற்புடையவர்களாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கடவுளின் படைப்பின் ஒழுங்கிலிருந்து வீழ்ந்த மனித இனம் மீட்புற தம் குமாரனையை நமக்கு தந்து இரட்சிப்பின் உறுதியை தந்து, பரிசுத்தாவியால் நம்மை நிறைத்து நம்முள் வாசம் செய்கிற கடவுளுக்கு நாம் நம்மையே முழுமையாக சமர்ப்பிப்பதை உண்மையான ஆராதனை.
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்
ஆதியாகமம் 4:4
நம் வாழ்வின் பலன்களில் முதன்மையானவற்றைக் கடவுளிடம் கொண்டு செல்வோமா? ஆபேலைப் போல் ஆராதிப்போம். ஆமென்.