நமது வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதல், மிக முக்கியமான புத்தகம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்திய உலகின் முடிவு கால நிகழ்வுகளை உள்ளடக்கிய புத்தகமே இது.
இதில் இரண்டாம் மூன்றாம் அதிகாரங்களில் அன்றைக்கு இருந்த 7 திருச்சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்திகள் உண்டு. அந்த திருச்சபை விசுவாசிகளின் நற்செயல்களையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கான அழைப்பை கூறி அதினால் அவர்களுக்கு அளிக்கப்படும் ஆசீர்வாத்தையும் குறித்த எழுதியிருப்பதை நாம் காண முடியும்.
முதலாவது திருச்சபையாக நாம் பார்ப்பது எபேசு திருச்சபை. இரண்டாம் அதிகாரத்தின் முதல் 7 வசனங்களில் நாம் எபேசு திருச்சபையைக் குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு திருச்சபைக்கும் 7 காரியங்கள் சொல்லப்பட்டிருப்பதை காணலாம், எபேசு திருச்சபைக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும், அவை நமக்கும் நம் திருச்சபைக்கும் எவ்வாறு பொறுந்தும் எனவும் பார்க்கலாமா
1) திருச்சபை (Church)
எபேசு திருச்சபை கடினமாக உழைக்கின்ற ஒரு திருச்சபையாக காண முடிகிறது. வெளிப்படுத்தல் 2:2,3 வசனங்களில் நாம் அதை காணமுடிகிறது.
2) கிறிஸ்து (Christ)
“ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவராக” கிறிஸ்து முன்னிறுத்தப்படுகிறார்
3) பாராட்டு (Commendation)
உண்மைக்காக உறுதியாக இருந்ததிற்காகவும், சகிப்புத்தன்மைகாகவும், பொறுமைக்காகவும், திருச்சபையின் கிரியைக்காகவும், பிரயாசத்திற்காகவும் (கடின உழைப்பு) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எபேசு திருச்சபையைப் பாராட்டுகிறார்.
இவற்றை நம் திருச்சபையோடும், நம்மோடும் பொறுத்திப்பார்த்து ஆராய அழைக்கப்படுகிறோம். நம் கிரியைகள்? நம் பிரயாசம்? நம் சகிப்புத்தன்மை? நம் பொறுமை? உண்மைக்காக நம் மனவுறுதி? இக்கேள்விகளுக்கான விடைகள் என்ன? கிறிஸ்துவின் பாராட்டை பெற ஏற்றதாய் இருக்கின்றனவா?
4) கண்டிப்பு (Condemnation)
நான்காம் வசனத்தில் “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.” என கிறிஸ்து எபேசு திருச்ச்பையை கடிந்துக்கொள்ளுகிறார். முதலில் இருந்து எவ்வளவு வீழ்ந்திருக்கிறாய் என்பதையும் நினைத்துப்பார்க்க ஆண்டவர் கூறுகிறார்.
நம் வாழ்விலும் கூட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பொழுதிலிருந்து அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பும் விசுவாசமும் வளர்ந்துள்ளதா? வீழ்ந்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி நம்மை நாமே தற்பரிசோதனை செய்ய அழைக்கப்படுகிறோம்.
5) அழைப்பு (Call)
மனந்திரும்பிதலுக்கான அழைப்பை ஆண்டவர் எபேசு திருச்சபைக்கு கொடுக்கிறார். ”மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” என்ற அழைப்பை ஐந்தாம் வசனத்தில் பார்க்கிறோம்.
இந்த அழைப்பு நமக்கும் பொறுந்தும். மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளை செய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளோடு செலவிடும் நேரம், ஜெப வாழ்வு, செய்யும் வேலையில் உண்மையும் உத்தமும், சாட்சியுள்ள வாழ்வு என தனிப்பட்ட முறையிலும் திருச்சபையாக அருட்பணிகளில் ஈடுப்படுவதும் அவசியம்.
6) ஆசீர்வாதம் (Challenge)
அழைப்பை ஏற்றுக்கொண்டு சவாலில் வெல்பவருக்கு, ”தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்” என்கிற ஆசீர்வாதத்தை ஆண்டவர் தந்திருக்கிறார்
வாழ்வு தருகின்ற மரத்தின் கனியை பெற்றுக்கொள்ள நம் வாழ்வு ஏற்றதாய் இருக்கிறதா என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
7) கட்டளை (Command)
கடைசியாக எபேசு திருச்சபை உள்ளிட்ட ஏழு திருச்சபைகளுக்கும் ஆண்டவர் கொடுக்கும் கட்டளை – ”ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்பதாகும்
கடினமாக உழைக்கும் திருச்சபையாக ஆண்டவர் அறிமுக படுத்திய எபேசு திருச்சபை உண்மைக்காகவும், சகிப்புதன்மைக்காகவும், பொறுமைக்காகவும், கிரியைகளுக்காகவும் ஆண்டவரிடத்தில் பாராட்டை பெற்றது. எனினும் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டதாக கடிந்து கொள்ளப்பட்டு, மனந்திரும்புதலுக்கான அழைப்பைப் பெற்றது.
நாமும் செய்கின்ற நன்மைகளை தொடர்ந்து செய்யவும், தீயவைகளை தவிர்க்கவும், கிரியை செய்கின்ற கிறிஸ்தவர்களாக, திருச்சபையாக; தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கும் ஆசீர்வாதத்தை பெற தகுதியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ் முயற்சிப்போம். அதற்காக கடவுளின் கிருபையை நாடுவோம்.