Teaching is a noble profession that shapes an individual’s character, caliber, and future – Dr. APJ Abdul Kalam

இந்த ஆசிரியர் தினத்தில் மேதகு பணியினை ஆற்றி ஒருவரின் குணத்தையும், திறனையும், எதிர் கால வாழ்க்கையும் வடிவமைகிற ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

தென் இந்திய திருச்சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிந்திக்கும் படி கொடுத்த தலைப்பு ”விடுதலையின் முகவர்களாக ஆசிரியர்கள்” என்பதாகும். இந்த தலைப்பில் மாலை ஆராதனையில் நான் அளித்த செய்தியில் ஒரு பகுதியை இப்பதிவில் பதிவிடுகிறேன்.

The Choices you make depends on the Voices you hear” நாம் எடுக்கும் முடிவுகள் நாம் கேட்கிற சத்ததின் பொறுத்து அமைகிறது. நாம் கேட்கும் சத்தத்தை மனசாட்சி என சொல்லலாம். விடுதலையின் முகவர்களாக செயல்பட நம் மனசாட்சி கிறிஸ்துவின் மனசாட்சியாக இருக்க வேண்டும். இன்னும் ஆழந்து நோக்கினால் கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் எனவும் சொல்லலாம்.

மாற்கு எழுதின நற்செய்தி 6 ஆம் அதிகாரம் 34-44 ஆம் வசனங்களில், கிறிஸ்து 5 அப்பங்களையும் 2 மீன்களையும் கொண்டு 5000 பேர்க்கு உணவளித்த அற்புத நிகழ்வு எழுதப்பட்டுள்ளது. இப்பகுதி நான்கு நற்செய்தி நூல்களிலும் எழுதப்பட்டிருப்பது தனிசிறப்பாகும்.

இப்பகுதியில் இருந்து மாற்றத்தின் முகவர்களாக, விடுதலையின் முகவர்களாக (Agents of Liberation) நாம் ஒவ்வொருவரும் மாற, கிறிஸ்துவின் மனசாட்சியின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் மூன்று காரியங்களை பார்ப்போம்.

  1. பரிவு தரும் பொறுப்பு – Compassion gives Responsibility
  2. பயிற்சி வெளிப்படுத்தும் திறன்கள் – Training reveals the Skills
  3. பகிர்வு கொண்டுவரும் மாற்றம் – Sharing brings Change

பரிவு தரும் பொறுப்பு – Compassion gives Responsibility

34 ஆம் வசனத்தில் – இயேசு, அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு (மனதுருகி), அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்

மக்கள் ஒருபுறம் ரோம பேரரசால் அடிமை பட்டும், இன்னொரு புறம் யூத மதத்தலைவர்களால் ஒடுக்கப்பட்டும், மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால் இயேசு பரிவு கொள்ளுவதைப் பார்க்கிறோம். அவர்களின் தேவையை உணர்ந்து தன் பொறுப்பை அறிந்து, கற்பிக்க தொடுங்குகிறார்.

பொறுப்பைப் உணர பரிவு தேவை. ஆசிரியர்கள் மட்டுமல்லாது, நாம் அனைவரும் பரிவு கொள்ளபவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். பரிவு பொறுப்பை தரும் – Compassion gives Responsibility

பயிற்சி வெளிப்படுத்தும் திறன்கள் – Training reveals the Skills

பொதுவாக நம் மனநிலை மறுப்பு மனநிலை தான் (a mentality of Rejection). இந்த வேத பகுதியில், சீடர்கள் எப்படி இவர்களுக்கு உணவளிக்க முடியும் என எதிர் கேள்வி கேட்டு, ஒரு மறுப்பு நிலையை அடைகின்றனர்.

நம் ஆண்டவர் இயேசு, அவர்களிடம் ”நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்” என சொன்னதும் அல்லாமல் ”உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள்” என்றார்

இயேசு சீடர்களுக்கு ஒரு சவாலை அளித்து, பயிற்சி அளிக்கிறார். அதன் சீடர்கள் ”ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” என கண்டுப்பிடிக்கிறார்கள்.

பயிற்சி மறுப்பு மனநிலையை அகற்றி, நம் திறன்களை வெளிப்படுத்தும். பயிற்சி அளிக்கும், இந்த உன்னத பணியை ஆற்ற நாம் அழைக்கப்படுகிறோம்.

மாணவனிடம் இருப்பதை  எப்படி வெளியே கொண்டு வரவேண்டும் என்பதை ஆசிரியர் பயிற்றுவிக்க வேண்டும். பயிற்சி திறன்களை வெளிப்படுத்தும் – Training reveals the Skills

பகிர்வு கொண்டுவரும் மாற்றம் – Sharing brings Change

41 ஆம் வசனம் – இயேசு அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்

நம்மிடம்  இருப்பதை பகிரும் போதும் செயல்படுத்தும் போதும், மாற்றம் ஏற்படும். அதியங்கள் நடைபெறும். நம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவர், தேவைக்கு மேற்பட்ட மிகுதியான நிறைவை தருவதை நம்மால் உணர முடியும்.

பரிவுடன் வரும் பொறுப்பும், பயிற்சியால் நாம் அறியும் திறன்களும், பகிர்வினால் ஏற்படும் மாற்றமும்…சமூக விடுதலையையும் ஆன்மீக விடுதலையையு கொண்டுவரும்.

பரிவு கொள்பவர்களாக பொறுப்பை உணர்ந்து, பயிற்சி செய்பவர்களாக திறன்களை அறிந்து, அதை பகிர்பவர்களாக செய்லாற்றுபவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாறும் போது – விடுதலையின் முகவர்களாக நாம் மாறுகிறோம். அதுவே கிறிஸ்துவின் பணி.

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்

லூக்கா 4:18-19