லெந்து என்பது ஒரு லத்தீன் வார்த்தை, அதன் பொருள் இலையுதிர் காலம் முடிந்து இளவேனிற்காலத்தின் துவக்கம். பழைய இலைகள் உதிர்ந்து, புதிய இலைகள் தளிர்க்கும் காலம். நாமும் தீயவை தவிர்த்ட்து புது பொலிவு பெறும் காலம்.
நம் கண்களைக் கவரும் வண்ணத்துப்பூச்சி, முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக (caterpillar or Larva) அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு (Pupa) எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறும் சுழற்சி நம்மை வியப்பூட்டும் நிகழ்வு (Metamorphosis). அழகற்ற அழுக்கான புழுவிலிருந்து அழகான வண்ணத்துப்பூச்சியாக உருமாறுகிறது (Transformation).
இவ்நிகழ்வை போல நாமும் நம் பாவ நிலையிலிருந்து கிறிஸ்துவிற்குள் புதுபிக்கப்பட அழைக்கப்படுகிறோம். We are called to be Transformed in Christ. அப்போஸ்தலனாகிய பவுல், ரோமருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்
சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்
உரோமையர் (ரோமர்) 12:1-2
இந்த மாற்றத்தை துவங்க ஏதுவாக, ஆறு காரியங்களை ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் ஆண்டவர் நமக்கு தருகிறார்
- உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள் (ஏசாயா 1:16)
- தீமை செய்தலை விட்டொழியுங்கள் (ஏசாயா 1:16)
- நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (ஏசாயா 1:17)
- நீதியை நாடித் தேடுங்கள் (ஏசாயா 1:17)
- ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள் (ஏசாயா 1:17)
- கடவுளிடத்தில் வாருங்கள்; வந்து வழக்காடுங்கள் (ஏசாயா 1:18)
இவைகளை நாம் செய்யும் போது இரத்த நிறமாய் சிவந்திருக்கும் நம் பாவங்கள் பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாகும் (ஏசாயா 1:18) என கடவுள் வாக்கத்தத்தம் தருகிறார்.
இந்த சாம்பல் புதன் துவங்கி நாம் அனுசரிக்க இருக்கும் லெந்து நாட்களை அர்த்தமுள்ளதாக, கடவுளுடைய வார்த்தையை தியானிப்பவர்களாக, நன்மை செய்பவர்களாக, ஒடுக்கப்பட்டோருக்கு உதவுபவர்களாக, கடவுளிடத்தில் மன்றாடுபவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
2/3/2022 சாம்பல் புதனன்று Rev. Francis GSM அவர்கள் வழங்கிய செய்தியை சார்ந்து எழுதியது – Link