Dad’s Poem on Jesus’s Birth.
ஈசாயின் வேர்த்தளிரே மூவுலகின் நற்தலைவா
தூசான இவ்வுலகில் பாவமற – ஏசாயா
சொன்னபடி வந்துதித்த தேவாட்டுக் குட்டியே
என்றுமெமைக் காப்பாய்ப் புரந்து.
மண்ணுளோரின் மாபாவம் வேரறவே மண்டலத்தில்
விண்ணுலோரும் சேர்ந்துயர்த்த ஏழையாய்க் – கண்குளிர
சேண்டலத்துச் சோதிடரும் சென்று பார்க்க விண்மீனும்
ஒண்ணாறைக் காட்டும் பிறப்பு.
புன்முளைகள் பொங்கியெழும் மண்ணாரும் பூங்கொல்லை
கன்றுகளும் கற்றாவும் கண்ணயர – மன்னுகின்ற
புன்னாயர் போற்றுதற்கு விண்ணொலியும் ஆர்த்ததுவெ
கன்னிமுளை கர்த்தன் பிறப்பு.
வெய்யோன் எழுந்தான் விரிகதிர் சிந்தியென
பொய்யிருள் மாய்ந்தது போன்றுயர்- அய்யனின்
மெய்யொளி பாய்ந்தது மூவுலகும் உய்ந்தது
துய்யொன் அருளாம் பிறப்பு.
நற்செய்தி நாயகமே நானிலத்தின் பாவமற
பொற்புடனே வந்துதித்தாய் மண்டலத்தில் – நற்குலத்தை
ஏய்த்தழித்த மாநாக எண்ணம்மாய்த் தேழையாய்
உய்யுமாறு காப்பாய்ப் புரந்து
கண்டனன் சூசையும் கொண்டனன் ஆனந்தம்
அண்டினன் அம்மையின் தூவடி – விண்ணொளி
கண்மணி மின்னிப் பொலிய விளங்கிடும்
விண்மணி நேசர் பிறப்பு.